நவ கிரகங்கள் - காரகத்துவம்

ஒருவர் ஜாதகத்தை ஆராயும்போது , எந்த பலன்களுக்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.  இந்த காராகத்துவங்களை , நீங்கள் கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்... 



1 . சூரியன் :

உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.

ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது. 

ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!

கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!

2. சந்திரன்

'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! 

ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. 

தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர். 

விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். 

மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. 

முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்!


3. செவ்வாய்
அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன்.

சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். 

கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. 

வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். 

4. புதன்

வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே.

வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம்.

விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம்.

5. குரு

பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். 

குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை  விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம்.
ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.  

வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

6. சுக்கிரன்

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.

கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்.

7. சனி

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 

சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 

எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.

இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 

மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்.


8. ராகு

சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். 

அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.

தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். 

9. கேது

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.

விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.

சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம். 

No comments:

Post a Comment