ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க ( பாலாரிஷ்ட தோஷம் நீங்க ), ஒரு அற்புத ஸ்தலம்.


இன்று  நாம் பார்க்க விருப்பது, ஒரு அற்புதமான ஆலயம் பற்றி. வெளி உலகிற்கு அதிகம் பரிச்சயமாகாத, ஆனால் வியத்தகு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள , ஒரு அற்புதமான ஆலயம்.. 


குழந்தைகள் பிறந்தாலும், இறை சித்தத்தால் நம்மோடு வாழக் கொடுத்து வைப்பதில்லை. இவர்களின் குறைதீர்த்து, ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க அருள்செய்கிறார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
  
ஸ்தல வரலாறு: 

சித்தர்கள் சிலர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் நினைத்தபோதெல்லாம் சுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பினர். சித்தர்கள் தனித்து சிவனை வணங்குவதையே விரும்புவர். இதற்காக, இவர்கள் காட்டுப்பகுதியில் லிங்கம் இருக்கிறதா என தேடியலைந்தனர். ஓரிடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபட்டனர். 

ஆண்டிகளான சித்தர்கள் தங்கியதால், அந்தப்பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்று பெயர் வந்தது. பின்னர் மீனாட்சியம்மைக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. 


ஸ்தல  சிறப்பு: 

சூரியனும் சந்திரனும் அருகருகே அருள்பாலிக்கின்றனர். எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளதால், சோமாஸ்கந்த தலமாக உள்ளது. இதை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். 

இத்தல பிள்ளையார் 'கோடி விநாயகர்' எனப்படுகிறார். இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்

முருகன் வடக்கு பார்த்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும்

இங்குள்ள வீராசன தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். 

கோயில் அமைப்பு: 

ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.மூலவர் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கியும், அன்னை மீனாட்சி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். 

கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் அருள்பாலிக்கின்றனர். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.

பிரார்த்தனை: 

குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்,  குழந்தை பிறந்து பிறந்து இறப்பவர்களின் குறை தீர்ப்பதற்காக ஒரு சில கோயில்களே உள்ளது. அதில் முதன்மையான கோயில் இது.

குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உளளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு.

தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு  வழிபடுவது நல்லது.

உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், உணவு செறிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு  சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து  அந்த பிரசாதத்தை சாப்பிட்டால்  விரைவில் குணமாகும்.

ஸ்தல பெருமை: 

சிவனாண்டி சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள். ஊர் செழிப்புடன் இருக்க, வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு திருமணம் செய்து கொண்டால், எந்தவித குறைபாடும் இன்றி வாழலாம் என்பதால், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.

திறக்கும் நேரம்: காலை 7 -12 மணி, மாலை 5.30 - இரவு 8.30 மணி.. 

இருப்பிடம்: மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியில் 60 கி.மீ., தூரத்தில் ஆண்டிபட்டி உள்ளது. இங்குள்ள சந்தை அருகே கோயில் அமைந்துள்ளது. போன்: 99527 66408, 94435 01421 . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல்ல , போட்டியிட்ட தொகுதி.. அதனாலே ஆண்டிபட்டிக்கு இன்னும் அறிமுகம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.. 

சுந்தரேஸ்வரரை வழிபட்டு, நல்ல அறிவுள்ள , ஆயுள் பலத்துடன் குழந்தை வரம் பெற்று , மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்... !

No comments:

Post a Comment