வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா?

வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா?

ஒவ்வொரு ஜீவனும் இவ்வுலகில் பிறக்கும்போதே. அவனது தலையில் சில விபரங்கள் எழுதப்பட்டுவிடுகின்றன. அவற்றில் இவ்வுலக ஆயுளும் ஒன்று. ஆகவே, அந்த ஜீவன் இவ்வுலகில் வாழவேண்டிய கால அளவை மாற்ற யாராலும் முடியாது. ஏன்? எந்த தெய்வத்தாலும் கூட இந்த ஜீவனுக்கு தீர்மானிக்கப்பட்ட ஆயுளை நீட்டிக்கும் சக்தியில்லை. அதைக் குறையாமல் பாதுகாக்கும் சக்தி மட்டுமே பல தெய்வங்களுக்கு உண்டு. ஆனால் ம்ருத்யுஞ்ஜயன் என்னும் சிவனுக்கு மட்டும்தான், ஜீவனின் ஆயுளை நீட்டிக்கும் தகுதியுண்டு (மார்க்கண்டேயரின் ஆயுள் முடியும் தருவாயில் யமதருமனிடமிருந்து மீட்டு ஆயுளை நீட்டியது அருளினார் சிவன்).

ஆகவேதான், நமது சாஸ்திரங்களிலும் ஆயுளை நீட்டிப்பதற்காக என எந்த ஒரு பூஜையோ, ஜபமோ, ஹோமமோ, வழிபாடுகளோ கூறப்படவில்லை. ஆனாலும், மனிதன் தனது தவறான செய்கைகள் (பாபச்செயல்கள்) மூலம் தனக்குத் தரப்பட்ட ஆயுளைக் குறைத்துக் கொள்கிறான், அவ்வாறு அவனால் தனக்குத்தானே குறைத்துக் கொள்ளப்பட்ட, முன்பே தீர்மானிக்கப்பட்ட தனது ஆயுளை, மறுபடியும் திரும்பப் பெறுவதற்காகவே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் போன்ற சில புண்ணிய காரியங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்யும் சில பரிகாரங்கள், தீர்மானிக்கப்பட்ட நமது ஆயுளை தக்கவைத்துக் கொள்ளவும் குறையாமல் பாதுகாக்கவும் உதவும். ஆகவே, புண்ணியங்கள் செய்வதன் மூலம் இந்தப் பிறவியில் தாங்கள் செய்யும் தவறால் குறைக்கப்பட்டுள்ள ஆயுளை திரும்பப்பெறலாமே தவிர, பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஆயுளை நீட்டிக்க இயலாது.

No comments:

Post a Comment